காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.43.91 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவி
காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.43.91 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் திறந்து வைத்தார்.

அந்த வகையில் சென்னை மாவட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் 9 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் காவலர் விடுதி; கிருஷ்ணகிரியில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 11 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பாளையம் என மொத்தம் 22 கோடியே 8 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காவல் துறையில் கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர், சிவகங்கை மாவட்டம் கீழடி, திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் சிந்தாமணி மற்றும் மாடக்குளம், தருமபுரி மாவட்டம் புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 காவல் நிலையங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று புதிய காவல் உட்கோட்டங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாவட்டம் செங்குன்றத்தில் 13 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 53 பணியாளர்கள் குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் செங்குன்றத்தில் 3 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 16 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மத்திய சிறை வளாகத்தில் 3300 சதுர அடி பரப்பளவில், 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பார்வையாளர்கள் காத்திருப்பு கூடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 4 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b