Enter your Email Address to subscribe to our newsletters

பாட்டியாலா, 23 டிசம்பர் (ஹி.ச.)
பஞ்சாபின் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் முன்னாள் காவல் துறைத் தலைவர் அமர் சிங் சாஹல்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் நேற்று துப்பாக்கியால் தனது மார்புப் பகுதியில் சுட்டுக்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சப்தம் கேட்டு, வந்து பார்த்தவர்கள் பலத்த காயத்துடன் இருந்த சாஹலை மீட்டு பார்க் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அமர் சிங் சாஹல் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அமர் சிங்கின் அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
சாஹல் சமீபத்தில், ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த குரூப்பில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பணம் போட்டால் அதிகளவில் பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் மோசடி குறித்து அவர் எழுதியுள்ள 12 பக்கக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்தக் கடிதத்தை அவர் தனது நண்பர்கள், உடனிருப்பவர்கள், பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவுக்கும் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில்,
வலி, சோகம், விரக்தியுடன் எழுதிக்கொள்ளுவது, வெல்த் ஈக்குவிட்டி அட்வைஸர் என்ற பெயரில் சுமார் ரூ. ரூ.8.10 கோடி அளவுக்கு நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் எனது பணத்தைப் பிரித்துக் கொடுப்பது பற்றி போதிய எச்சரிக்கையுடன் இல்லாதது குறித்து வருந்துகிறேன்.
ஆரம்பத்தில் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குரூப்கள் நன்றாக ஆக்டிவேட்டாக இருந்தது. பங்குச் சந்தையில் அதிகளவிலான பணம் சம்பாதித்துத் தருவதாகவும், மத்திய அரசு மற்றும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட குழு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அக்டோபர் 28 ஆம் தேதி தனியார் வங்கியின் மூத்த அதிகாரி என்று அறிமுகமான ஒருவர், ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தை எவ்வாறு செயல்படுகிறது, பங்குச் சந்தையில் நஷ்டமாவது எப்படி என்பது குறித்து விளக்கினார்.
மிகவும் துல்லியமாக நடந்துள்ள இந்த சைபர் மோசடியை, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மட்டுமே கண்டறிய முடியும். அவர்களால் மட்டும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும். அதை சிபிஐ அல்லது பஞ்சாப் காவல் துறையில் உள்ள ஒரு சிறப்புப் பிரிவிடம் கூட ஒப்படைக்கலாம்.
மோசடி செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினாலும், அவர்களின் திட்டத்துக்கு நான் இரையாகிவிட்டேன். என் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
எனது பாதுகாவலரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி என்னை நானே சுட்டுக் கொண்டேன். எனது பாதுகாவலர் நல்லவர். என்னிடம் தனிப்பட்ட ஆயுதம் எதுவுமில்லை.”
என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக பாட்டியாலா மூத்த காவல் கண்காணிப்பாளர் வருண் சர்மா தெரிவித்தார்.
தற்கொலை முயற்சி மேற்கொண்ட சாஹல், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா மற்றும் பெஹ்பால் கலனில் அமைதியாகப் போராடிய சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையவர்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM