Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 டிசம்பர் (ஹி.ச)
இலங்கையை கொடூரமாக தாக்கிய டித்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் இந்திய மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவி செய்து இருந்தது.
இந்நிலையில், பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் பேச்சு நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடனும் ஜெய்சங்கர் இன்று (டிசம்பர் 23) சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும். இதில் 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும்.
இந்த நிதி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும், சாலை, ரயில் மற்றும் சேதம் அடைந்த பாலங்களை சரி செய்ய பயன்படுத்தப்படும்.
2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், இந்த இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டு வருபவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b