Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 23 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலச்சமுத்திரம் கிராமத்தில் பாலாறு பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணியின் மொத்த உயரம் 65 அடி ஆகும். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டும். அணை முழு கொள்ளளவை எட்டினால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பாசனத்திற்காக இந்த அணையில் இருந்து நாளை (டிசம்பர் 24) முதல் 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு, 24.12.2025 முதல் 03.03.2026 வரை 70 நாட்களுக்கு, 770.77 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட). தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு மற்றும் கீரனூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b