Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று
(டிசம்பர் 23) வந்தார்.
தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது,
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பின்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது,
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக -பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. நண்பர் மற்றும் சகோதரர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் என்.டி.ஏ. ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்.
பிரதமர் மோடியின், தலைமையின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
கூட்டணிக் கட்சிகள் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்று கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b