Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 27 டிசம்பர் (ஹி.ச)
சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது.
நவ.17-ம் தேதி அதிகாலை முதல் மண்டல பூஜை தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த சீசனில் வித்தியாசமாக சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. மற்ற நாட்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அரவணை விற்பனையிலும் பல மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். நவ., 16-ல் துவங்கிய மண்டல காலம் இன்று (டிசம்பர் 27) இரவு நிறைவு பெறுகிறது.
மண்டல பூஜைக்கு முன்னதாக ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்த ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
இன்று (டிச., 27) அதிகாலை நடை திறந்து நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 10:10 முதல் 11:30 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்கு பின்னர் இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும்.
அதன்பின்னர் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b