Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், நேற்று சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ கட்சியைப் பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம்:1
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர், 27ஆம் தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 இலட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் கணக்கெடுப்புப் பணியின்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர் என்றும், அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்தது போலவே தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும் என்று முன்பே நாம் எச்சரிக்கை செய்துததுதான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டை எழுப்புகிறது.
தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை இருப்பின் படிவம் 7 , முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஆகியவற்றை ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் .
சட்டமன்றத் தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக கள ஆய்வு செய்யும் கடமையை மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் :2
கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்தியது. இச் சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமான மற்றும் நிலையான தீர்வாக அமைந்தது. கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி, ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது.
ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ஒட்டுமொத்தமாக செயல் இழக்க சதிகளை அரங்கேற்றி வந்தது. 2008 மற்றும் 2011 க்கு இடையில், இந்தத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் குறைத்துக் கொண்டே வந்தது.
2021-2022-இல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், 2022 - 2023-இல் 73,000 கோடி ரூபாயும், 2023-2024-இல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியை ஒன்றிய அரசு குறைத்தது. 2023-2024-இல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க முடியாமல் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, இத்திட்டத்தில் பயனாளிகள் ஆதார் இணைக்கவில்லை என்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களை ஒன்றிய அரசு பட்டியலில் இருந்து நீக்கியது.
அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான் ஒன்றிய அரசு, இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என மாற்றி உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரிலிருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரை நரேந்திர மோடி அரசு நீக்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டி இருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில், 40 விழுக்காடு நிதியை மாநில அரசுகள் செலவிட வேண்டும் என்று இப்புதியச் சட்டம் கூறுகிறது. மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கச் செய்வதுடன், நூறு நாள் வேலைத் திட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இயற்றப்பட்ட புதியச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 3
மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம், ஹரியானா, ஒடிசா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரவலாக தாகுதல்கள் நடந்தேறியுள்ளது.
2025 ஜனவரி முதல் இந்த டிசம்பர் வரை நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது 700 க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவை உச்சகட்டம் பெற்று கிறிஸ்தவ தின கொண்டாட்டங்களின் மீது கொடூரமான தாக்குதல்களை பாசிச இந்துத்துவ மத வெறி குண்டர்கள் நடத்தியுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான சாண்டா உடை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்களை தாக்குவது தொடங்கி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ தின கொண்டாட்டங்கள் அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கண்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பாசிச குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்துத்துவப் பாசிசத்தை வேரறுக்க ஜனநாயக முற்போக்குச் சக்திகள் அணி திரண்டுப் போராட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் :4
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் இவ்வளவு காலம் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எந்த வகையிலாவது மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் உள்ள, தர்காவிற்குச் சொந்தமான இடத்தில் அமையப் பெற்றுள்ள நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது என்று ஆர்.எஸ்.எஸ் - பாஜக இந்துத்துவா சங்பரிவார் கூட்டம் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியத் தீர்ப்பை ,முன் வைத்து தமிழ்நாட்டின் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட சதிகளை முறியடித்த தமிழ்நாடு அரசுக்கும், பிளவுவாத அரசியல் சக்திகளைப் புறந்தள்ளிய மதுரை வாழ் தமிழ் பெருமக்களுக்கும் மறுமலர்ச்சி திமுக பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் :5
இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறை ஏற்கெனவே பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் துயரம் நெருக்கடியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றது. இத்தகைய சூழலில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “விதை மசோதா 2025” வரைவு, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
1966-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த விதைச் சட்டம், வர்த்தக ரீதியான விதைகளை மட்டுமே கட்டுப்படுத்தியது. விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகளிலும், அவர்கள் விதைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அந்தச் சட்டம் தலையிடவில்லை. ஆனால், புதிய மசோதா- 2025 முற்றிலும் மாறுபட்டது. இது ‘விதை’ என் பதை ஒரு சமூகச் சொத்தாகப் பார்க்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனைப் ‘பண்ட மாக’ மட்டுமே பார்க்கிறது.
இந்த மசோதாவின் மிக ஆபத்தான அம்சம், விதைகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மறைமுகமாகப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைப்பதாகும். விவசாயிகள் தங்கள் விளைச்சலிலிருந்து விதைகளைச் சேமிப்பதும், சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதும் இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடு.ஆனால், இனி அனைத்து விதைகளும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை, பாரம்பரிய நாட்டு ரகங்களைச் சந்தையிலிருந்து அந்நியப்படுத்தும்; அகற்றி விடும். விவசாயிகளின் கைகளில் இருந்து விதை உரிமையைப் பறித்தால், நமது உணவு இறையாண்மையே ஆபத்தில் சிக்கும்.
வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை. ஆனால், இந்த மசோதா அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடம் குவிப்பதோடு, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது. மேலும், 2001-ஆம் ஆண்டின் தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பாதுகாப்புகளை இந்த புதிய வரைவு சிதைக்கிறது. உயிரியல் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் இது முரணாக உள்ளது.
தரமற்ற விதைகளால் பயிர் விளைச்சல் பொய்த்துப் போகும்போது, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழப்பீடு பெறுவது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். அந்நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது தில்லிக்கோ அலைய முடியாது. பி.டி.பருத்தி போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்கெனவே ஏற்பட்ட பொருளாதாரச் சரிவையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் நாடு மறக்கவில்லை. விதை என்பது வெறும் வேளாண் இடு பொருள் அல்ல, அது நமது உணவின் உயிர் மூச்சு, பண்புக்கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, நமது அடையாளம். அதைச் சில பெருநிறுவனங்களின் லாப வேட்டைக்குத் தாரை வார்ப்பது என்பது இந்தியாவின் எதிர்காலத்தையே அடகு வைப்பதற்குச் சமம். எனவே விதை மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் :6
தமிழ்நாட்டின் நலனுக்காக ஆறாயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு சாதனைச் சரித்திரம் படைத்தவர் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், காவிரி நதி நீர் உரிமை காக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றவும், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கவும், தென்னக நதிகளை இணைக்கவும், முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக் கோரியும், நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுவரை 10 நடைபயணங்கள் மேற்கொண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தற்போது சமத்துவ நடைபயணத்தை அறிவித்து இருக்கிறார். போதைப் பொருள், கஞ்சா, அபின் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாதி சமய நல்லிணக்கம் தழைத்து ஓங்க வேண்டியும், இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர பரப்புரை மேற்கொள்ளவும் 2026 ஜனவரி 02 ஆம் நாள் திருச்சியில் தொடங்கி, ஜனவரி 12 ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டின் உயர்வுக்காக சமத்துவ நடைபயணம் மேற்கொள்ளும் திராவிட இயக்கப் போர்வாள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு தமிழ்நாடு பெருமக்கள் ஆதரவு தருமாறு மறுமலர்ச்சி தி.மு.க. வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :7
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கழகம் தேர்தல் நிதி திரட்டும் பணியைத் தொடங்கி உள்ளது.
தேர்தல் நிதியைப் பெற்றுக்கொள்ள கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்கும் நிதியளிப்புக் கூட்டங்களை பிப்ரவரி முதல் வாரம் நடத்துவது என்று கழக உயர்நிலைக் குழு தீர்மானிக்கிறது.
போன்ற 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b