இந்திய கலாசாரத்தை குழந்தைகள் பின்பற்றச் செய்வது பெற்றோர் கடமை - திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பேச்சு
மதுரை, 29 டிசம்பர் (ஹி.ச.) பேனாக்கள் பேரவை சார்பாக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது; எழுத்து என்பது, மக்களை வழிநடத்திச் செல்லும் முதுகெலும்பு போன்றது
பாக்யராஜ்


மதுரை, 29 டிசம்பர் (ஹி.ச.)

பேனாக்கள் பேரவை சார்பாக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது;

எழுத்து என்பது, மக்களை வழிநடத்திச் செல்லும் முதுகெலும்பு போன்றது. கதைகள், கட்டுரைகள் மூலமாக இளைய சமுதாயத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல உறுதுணையாய் இருப்பது எழுத்துதான்.

படிப்பு என்பது பொருளாதாரத்திற்கு மட்டுமானது அல்ல, வாழ்க்கைக்கானது.

எழுத்தாளர்கள் நமது நாட்டின் கலாசாரச் சிற்பிகள். ஒருசில எழுத்தாளர்கள், அந்த வரம்பை மீறி, வாழ்க்கைக்குத் தேவையற்ற தீய பழக்கமான போதை மருந்துகளை உட்கொள்வதைப் பற்றியும், அதனை எப்படி எடுத்துக்கொள்வது, மற்றும் அதனால் என்ன மாதிரியான போதை வருகிறது என்பது பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதுவது கண்டனத்திற்கு உரியது.

என்னிடம் பயிற்சி எடுக்க வந்த உதவி இயக்குநர்களிடம், அவர்களுடைய படங்களில், கெட்ட வழியை காட்டி விடாதீர்கள் என அறிவுறுத்துகிறேன்.

கதை, பழமொழி புத்தகங்கள் மூலமாக பள்ளியில் கற்காததைக் கற்று, வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டேன்.

மேலை நாடுகளில், முப்பது வருடகாலம் சேர்ந்து வாழும் தம்பதியருக்கு விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

நாம், அந்த கலாசாரச் சீரழிவை நோக்கிப் போவது வருத்தம் தருகிறது. இந்தியக் கலாசாரப் பாரம்பரியத்தை விட்டு மேலைநாட்டவரின் கலாசாரத்தைப் பின்பற்றும் நமது குழந்தைகளின் எதிர் காலம் கவலை தருகிறது. இள வயதிலேயே ஆண் நண்பர்களோடு தனி அறையில், பெற்றோர் முன்னிலையிலே செல்லுவதை, நானும், என் மனைவியும் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

இந்திய கலாசாரத்தை, ஐந்து வயதில் இருந்தே குழந்தைகள் கற்று, பின்பற்றச் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், அவருடன் நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கவிஞர், தயாளன் மூத்த அறிஞர், N.R.சம்பத் மற்றும் பேனாக்கள் பேரவை நிறுவனர் திரு என்.சி . மோகன்தாஸ் ஆகியோர்பேனாக்கள் பேரவை பல்வேறு சேவைகளை செய்து வருவதை குறிப்பிட்டனர்.

நிகழ்வில் நவரஞ்சனி ஶ்ரீதர் எழுதிய கரையோரக் கனவுகள் புத்தகத்தை பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார்.

விழாவில்

கல்வி வள்ளல் முத்துக் குமாரசாமி கொடையாளர், பஞ்சாபகேசன் அவர்கள், மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பேனாக்கள் பேரவை சார்பில் சமூக/இலக்கிய சேவை புரிந்து வரும் நான்கு சாதனையாளர்களான,

சமூக சேவகர் வெ.இராமாராவ்

சூரியநாராயணன்

சமூக சேவகர். N.R.சம்பத்

மூத்த பத்திரிகையாளர். நூருல்லா

ஆகியோரை நடிகர் பாக்யராஜ் பாராட்டினார்.

தந்தை இழந்த ஏழை அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு , முத்துக்குமாரசாமி உதவித்தொகையாக ₹60000/- த்தை 8 பேர்களுக்கு பாக்யராஜ் மூலமாக வழங்கினார். மேலும் நிகழ்வில் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் பணிகளுக்கு சம்பத்குமார் வழங்கிய ரூபாய் 5 ஆயிரத்தை பாக்யராஜ் மூலமாக வழங்கினார்.

நிகழ்வில் கலாரசிகர், ராம்ஜி அவர்கள், மூத்த சுயசரிதையாளர், ராணிமைந்தன் நாவலாசிரியர், ஜவகர், மலர்வனம் ஆசிரியர், ராம்கிஉட்பட பலர் பங்கேற்றனர்

Hindusthan Samachar / Durai.J