Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 4 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது.
ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது.
நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்கா கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பினார். அதே போல, கேஷவ் மஹாராஜ் மற்றும் லுங்கி இங்டியும் ஆடும் லெவனில் இடம் பிடித்தனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்க வீரர்களாக வந்த ஜெயிஸ்வால்(22), ரோகித் சர்மா(14) நிலைக்கவில்லை. இதன் பிறகு ஜோடி சேர்ந்த கோஹ்லி, ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இந்தப் போட்டியிலும் சதம் அடித்த கோஹ்லி 102 ரன்னில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ருதுராஜ் கெயிக்வாட் 105 ரன்களுக்கு அவுட்டானார்.
வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். கேப்டன் கேஎல் ராகுலும் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் குறையவில்லை. இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணிக்கு 359 ரன் என்ற கடின இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. குயின்டன் டி காக் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் கேப்டன் பவுமா இணைந்து ரன்களை குவித்தனர். பவுமா 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மாத்யூ ப்ரீட்ஜ்கே 68, பிரெவிஸ் 54 ரன்களை குவிக்க தென் ஆப்ரிக்க அணியின் ரன் அதிகரிக்க துவங்கியது. மார்க்ரம் 110 ரன்னில் அவுட்டானார்.
ஜேன்சன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜோர்ஜி 17 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் முறையில் திரும்பினார். இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 49 .2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒரு நாள் தொடர் 1 -1 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் உள்ளது.
3வது ஒரு நாள் போட்டி வரும் 6 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM