புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி விதிக்கும் மசோதா- பார்லி -யில் நிறைவேற்றம்
புதுடெல்லி, 5 டிசம்பர் (ஹி.ச.) புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரி விரைவில் முடிவுக்கு வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை தவிர்க்கவும், சிகரெட், ஹுக்கா, மெல்லும் புகையிலை, பான் மசாலா உள
புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி விதிக்கும் மசோதா பார்லி.,யில் நிறைவேற்றம்


புதுடெல்லி, 5 டிசம்பர் (ஹி.ச.)

புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரி விரைவில் முடிவுக்கு வருகிறது.

இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை தவிர்க்கவும், சிகரெட், ஹுக்கா, மெல்லும் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விதிப்பை மத்திய கலால் வரியின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே, மத்திய கலால் வரி திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

இதைத் தொடர்ந்து இம்மசோதா, நேற்று முன்தினம் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் இம்மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

புகையிலைக்கு மாற்றாக வேறு பணப்பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு அரசு ஊக்கம் அளித்து வருகிறது.

ஆந்திரா, பீஹார், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா, தமிழகம், தெலுங்கானா, உ.பி., மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகள், புகையிலை பயிரிடுவதை கைவிட்டுள்ளனர்.

தற்போது இம்மாநிலங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்களில், புகையிலைக்கு பதிலாக வேறு பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் புகையிலை பொருட்கள் மீது, 40 சதவீத அளவுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். அதைவிட கூடுதல் வரி விதிப்பதற்காக, ஜி.எஸ்.டி., வரி முறைகளில் இருந்து புகையிலை பொருட்கள் நீக்கப்படுகின்றன.

இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரியை ஈடுகட்டவும், புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகப்படுத்தவும், இம்மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், புகையிலை பொருட்களுக்கான கலால் வரி இதன் மூலம், 60 முதல் 70 சதவீதம் வரை உயரும். இதனால், 1,000 சிகரெட்டுக்கு, 5000 ரூபாய் வரை விலை உயரும்.

நீளமான மற்றும் பில்டர் கொண்ட 1,000 சிகரெட்டுகள் விலை 2,700 முதல் 11,000 ரூபாய் வரையிலும், மெல்லும் புகையிலை கிலோ 100 ரூபாய் வரையிலும் உயரும்.

Hindusthan Samachar / JANAKI RAM