Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 டிசம்பர் (ஹி.ச.)
விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு தொடர்பான புதிய விதிகளை அமல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இண்டிகோ நிறுவனம் அவகாசம் கோரியுள்ளது.
விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய, கடுமையான ‘விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.
இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களுக்கு வந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இண்டிகோ விமான சேவையில் நிலவும் குழப்பம் குறித்தும், இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்வதற்கான திட்டத்தைச் சமா்ப்பிக்குமாறு அந்நிறுவனத்திடம் அரசு வலியுறுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்து இண்டிகோ நிறுவனம்,
”எஃப்டிடிஎல் விதிகளை அமல்படுத்தும் நடைமுறையில் இண்டிகோ நிறுவனம் பணியாற்றி வருகின்றது. ஆனால், பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பிப். 10, 2026 வரை புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிப். 10, 2026 முதல் எஃப்டிடிஎல் விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.”
என அரசிடம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM