Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 டிசம்பர் (ஹி.ச.)
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று(டிச ) காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் மோடியும் அவரை வரவேற்றனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை புதின் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,
ரஷ்ய அதிபர் புதின் தொலைநோக்குடன் செயல்படக்கூடிய தலைவர். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.
ஒரு உண்மையான நண்பராக அவர் எல்லாவற்றையும் அவ்வப்போது எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார். நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தை (உக்ரைன் விவகாரம்) நான் உங்களுடன் பலமுறை விவாதித்துள்ளேன். அதனை உலகுக்கு முன்பாகவும் முன்வைத்துள்ளேன். அமைதியில்தான் நாடுகளின் நலன் அடங்கி இருக்கிறது. ஒன்றாக, உலகை அந்த பாதையை நோக்கி வழிநடத்துவோம்.
சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலம் உலகம் மீண்டும் அமைதியின் பாதைக்குத் திரும்பும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக சமீப நாட்களில் நான் உலக தலைவர்களிடம் பேசும்போதெல்லாம், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், இந்தியாவின் நிலைப்பாடு அமைதியின் பக்கமே உள்ளது என்றும் தெளிவாகக் கூறியுள்ளேன்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
பல்வேறு முன்னேற்றங்களுடன் இந்தியா - ரஷ்யா உச்சிமாநாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. உங்களின் (புதின்) இந்த வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தியாவுக்கான உங்கள் முதல் பயணம் நிகழ்ந்து 25 வருடங்கள் ஆகிறது. அந்த முதல் வருகையின்போது, இரு நாடுகளின் கூட்டாண்மைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. எங்கள் இருவருக்குமான உறவும் 25 ஆண்டுகளாக உள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி வழங்கும் நம்பிக்கைக்கு உரிய நாடு ரஷ்யா. இந்தியாவும், ரஷ்யாவும் சுதந்திரமான நாடுகள். கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய ராணுவம் நவீன வசதிகளை பெற ரஷ்யா உதவி செய்து வருகிறது. இந்தியா , ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. அணுமின் உற்பத்திக்கான கூடங்குளம் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதை ரஷ்யா தொடரும்.
கடந்த ஆண்டு ரூ.6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம் நடந்துள்ளது. பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்,இந்தியா -ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுவர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டும் ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று கணித்துள்ளோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b