Enter your Email Address to subscribe to our newsletters
கட்டாக், 10 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிரது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 305 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து 306 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார்கள். 60 ரன்களில் கில் அவுட்டான நிலையில், ரோகித் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி 5 ரன்களில் அவுட்டாக, ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் - ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
மேலும், 76 பந்துகளில் சதமடித்து அசத்திய ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 331 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரோகித் சர்மா, 337 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
இந்திய பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், இந்த பட்டியலில் ரோகித் சர்மா, விரைவில் முதல் இடத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar