Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய டாஸ்மாக் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதன் மூலமாக கோடி கோடியாக வருமானம் ஈட்டும் திமுக அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அதன் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் தான் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar