Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘சபா நாயகன்’, ‘பொண் ஒன்று கண்டேன்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். 2025 ஆம் ஆண்டிலும் பல படங்களில் நடித்து வருபவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருபவர், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பரசாக்தி’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் 23 வது படமான இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ’AS2’ என்று வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தை நடிகர் அசோக் செல்வன், தனது சகோதரி அபிநயா செல்வத்துடன் இணைந்து ஹப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். ஏற்கனவே இவர்கள் ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
ஆனால், உண்மையிலேயே இந்த படத்தை தயாரிப்பது ஐங்கரன் இண்டர்நேஷ்னல் கருணாமூர்த்தி தானாம், அவர் முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்ட போது, நடிகர் அசோக் செல்வன், தானே தயாரித்து கொடுப்பதாக கூறினாராம். நாயகனே படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் படம் விரைவாக முடியும் என்பதால், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி அவரிடமே படத்தின் தயாரிப்பு பணியை ஒப்படைத்து விட்டாராம். இதற்கு முன்பு அசோக் செல்வன் தயாரித்த ‘ஓ மை கடவுளே’ படமும் மறைந்த தயாரிப்பாளர் அக்சஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபுக்காக தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / J. Sukumar