Enter your Email Address to subscribe to our newsletters
பினாங்கு, 11 பிப்ரவரி (ஹி.ச.)
மலேசியா நாட்டின் பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 239 ஆம் ஆண்டு தைப்புசத் திருவிழா மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சட்டிப்பூசம் என்று அழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், ஆலய நிர்வாகக் குழுவினருடன் இணைந்து தண்ணீர் பந்தல்களுக்கு வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பினாங்கு மாநிலம் பல்லின மக்களின் பன்மூக கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களை அமல்படுத்துவதில் பிரசித்தி பெற்று வருகின்றது என சாவ் மேலும் சூளுரைத்தார். மூன்று நாட்களுக்கு அனுசரிக்கப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு 1.5 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் திரளுவர் என எதிர்ப்பார்க்கப்படுறது.
பினாங் மாநிலத்தில் தைப்பூசத்தின் ஒரு தனித்துவமான அம்சம் சீன சமூகத்தின் குறிப்பிடத்தக்க ஈடுபாடு ஆகும். சீன இனத்தவர்கள் காவடி எடுத்து செல்வது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைப்பது, வரும் தேருக்கு வழிவிடுவது, கோவில் அன்னதான நிகழ்வுகளில் பங்கேற்பது என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.
வண்ணமயமான புடவைகளிலும், நேர்த்தியான வேஷ்டிகளிலும் சீனர்கள், ஆடம்பரமாக தேங்காய் உடைத்து, வெறுங்காலுடன் நேர்த்திகடன் செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ மூலம் சீனர்களுக்கு உலக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் காவல்துறையினரின் வழிகாட்டுதலையும் பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். இதன்மூலம், பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் தைப்பூச திருவிழாவை கொண்டாட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / J. Sukumar