Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 7 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து, பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லாததால் நியூசிலாந்து நாட்டில் குடியேறிய நடிகர் அப்பாஸ், தற்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.
1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அப்பாஸ், அப்படத்தின் வெற்றியால் பல படங்களில் நாயகனாக நடித்தார். அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தனர். தமிழ்ப் படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.
இதற்கிடையே, அவரது சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இறுதியாக தமிழில் வெளியான ‘ராமானுஜன்’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சில விளம்பர படங்களில் நடித்திருந்தார்.
அதன்பின் அவர், தனது மனைவி குழந்தைகளுடன் நியூசிலாந்து நாட்டில் குடியேறிவிட்டார். அங்கு அவரது மனைவி முன்னணி ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். அப்பாஸும் முன்னனி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் என்றும், மகன் ஏமான் மற்றும் அமகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் ஒரு இணையத் தொடரில் தான் அப்பாஸ் நடிக்க இருக்கிறார். இந்த இணையத் தொடரை ’களவாணி’, ‘நையாண்டி’, ‘வாகை சூட வா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் இயக்குகிறார்.
இதில், நடிகர் அப்பாஸுடன், நடிகைகள் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். ‘எக்ஸாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இணையத் தொடர் அமேசான் இணையத்தில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / J. Sukumar