Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 7 பிப்ரவரி (ஹி.ச.)
சொந்தமாக அதே சமயம், குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய விரும்புகிறவர்களுக்கு காடை வளர்ப்பு சரியான தேர்வு. ஆடு, கோழி இறைச்சிக்குப் பிறகு பொதுமக்கள் அதிகம் வாங்குவது காடை இறைச்சி தான். குறைவான விலையில் ருசியான இறைச்சி மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதால் காடை வாங்குவதில் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் ஆர்வம் காட்டுவதால், காடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயம் லாபத்தோடு, நிலையான வருமானத்தையும் பார்க்கலாம்.
அந்த வகையில் குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பில் எவ்வாறு அதிக லாபம் பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.
காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் :
காடைகளில் பல ரகங்கள் இருந்தாலும் நாமக்கல், ஜப்பானிய காடைகள் ஆகிய இரண்டுமே வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. இதனை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது. ஒரு சதுர அடியில் 5 காடைகள் வரை வளர்க்கலாம். கோழிகள் ஆடுகளை விட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் எல்லா தட்பவெப்ப நிலையிலும் வளரும். மேலும் இதற்கு மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது. காடைகுஞ்சுகளானது 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்கு தயராகி விடுவதால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலேயே வருமானம் பெற முடியும்.
கொட்டகை அமைப்பு :
காடைகளை ஆழ்கூள முறை, கூண்டு முறை என இரண்டு வகைகளாக வளர்க்க வேண்டும்.
ஆழ்கூள முறை :
ஒரு சதுர அடிக்கு ஆறு காடைகள் வரை, முதல் இரண்டு வாரம் ஆழ்கூள முறையில் வளர்த்துப், பின் அவற்றை கூண்டுகளுக்கு மாற்றி வளர்க்க வேண்டும். ஆழ்கூளத்தில் நன்கு காய்ந்த மணல் கீழாகவும் ஈரத்தை உறிஞ்சக்கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவு அல்லது நிலக்கடலை தோல் மேலாகவும் பரப்பியதாக இருக்க வேண்டும். சுமார் 5 முதல் 10 செமீ உயரத்துக்கு ஆழ்கூளம் இருக்க வேண்டும். காடைகளை கம்பிவலைக் கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால் முதல் வாரத்தில் கூண்டில் அடிப்பகுதியில் கெட்டியான அட்டைகளை விரிக்க வேண்டும்.
கூண்டு முறை வளர்ப்பு :
கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகள் வரை அமைத்து ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும். 3 முதல் 6 வாரங்களுக்கு 4 அடி நீளமும் 2 அடி அகலத்திலும் 50 காடைகள் வரை வளர்க்கலாம். முதல் நான்கு வார காலத்துக்கு தீவனத் தொட்டி 2 - 3 செமீ உயரத்திலும் தண்ணீர்த் தொட்டி 1 - 1.5 செமீ உயரத்திலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காடை கூண்டுக்கு 60 மெகாவாட் திறன் கொண்ட பல்பு வெளிச்சம் போதுமானது.
தீவனம் :
காடை தீவனம் மிக சிறிய துகள்களாக இருப்பது மிகவும் அவசியம். மக்காச்சோளம் எண்ணெய் நீக்கிய அரிசி, தவிடு, கடலை புண்ணாக்கு போன்றவைகளை வழங்கலாம். காடை குஞ்சுகளுக்கு புரதசத்து அதிகமாகவும் எரிசக்தி குறைவாகவும் இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை காடைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு குறைந்த செலவில் காடை குஞ்சுகளை வாங்கி அவற்றை 6-7 வாரம் வரை பராமரித்தால் அவை இறைச்சிக்காக தயாராகிவிடும். அதன்பின் ஒரு காடை ரூ.30 வரை விற்காலாம். எனவே, குறைந்த முதலீட்டில் நிலையான மாத வருமானம் பெற விரும்புவர்கள் காடையை வளர்த்து பயன் பெறலாம்.
Hindusthan Samachar / J. Sukumar