Enter your Email Address to subscribe to our newsletters
சூரிச், 8 பிப்ரவரி (ஹி.ச.)
நிர்வாக குளறுபடியால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு, சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பான பிபா, மூன்றாவது முறையாக தடை விதித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில், நிர்வாகிகள் இடையிலான மோதல் நிர்வாக மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை அறிந்த பிபா, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்படி உத்தரவிட்டதோடு, அதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றையும் அமைத்தது.
பிபா அமைத்த சிறப்பு குழு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் பிரச்சனைகளை கோடிட்டு காட்டி, பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3-வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது. பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Hindusthan Samachar / J. Sukumar