Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 8 பிப்ரவரி (ஹி.ச.)
போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதும், பல்வேறு வகையில் போதைப் பொருட்கள் இளைஞர்களை வந்து சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை குறிவைத்து ‘ஸ்ட்ராபெரி க்விக் மெத்’ எனப்படும் போதைப்பொருள் விற்பனையில் சில கும்பல் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தனியார் ஐடி நிறுவனங்களின் அருகில் இருக்கும் கடைகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் எந்த போதைப்பொருளும் பிடிபடவில்லை என்றாலும், இத்தகைய நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சோதனை குறித்து போலீசார் கூறுகையில்,
“கடந்த 2007ல் ’ஸ்ட்ராபெரி க்விக் மெத்’ போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்து விட்டது. இந்த போதைப்பொருளில் ஸ்ட்ராபெரி வாசம் வீசும். இளம் சிவப்பு நிறத்தில், பஞ்சு மிட்டாயில் பொம்மை செய்தால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இனிப்பு சுவையுடன் வாயில் போட்டவுடன் 'டப்' என வெடிக்கும். இந்த சத்தத்திற்காகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாங்குவர். மெத் ஆம்பெட்டமைன் கலந்து இருப்பதால் வரும் போதை காரணமாக, அடிக்கடியும், அதிகமாகவும் வாங்க துாண்டும். இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலை தேடி வருகிறோம். தமிழகத்தில் இந்த போதைப்பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.என்று தெரிவித்தனர்.
Hindusthan Samachar / J. Sukumar