Enter your Email Address to subscribe to our newsletters
ரோட்டர்டம் , 9 பிப்ரவரி (ஹி.ச.)
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பாரத், இயக்கியிருக்கும் முதல் திரைப்படமான ‘பேட் கேர்ள்’ நெதர்லாந்து நாட்டின், ரோட்டர்டாமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ’ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான நெட்வொர்க்’ (Network for the Promotion of Asian Cinema) என்ற பிரிவில் விருது வென்றுள்ளது.
NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம், 'Bad Girl' திரைப்படம் தனது இடத்தை, தமிழில் கதை சொல்லலுக்கான சிறப்பையும் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான வலிமையையும் உலகளாவிய சினிமா அரங்கில் உறுதிப்படுத்தியுள்ளது.
’பேட் கேர்ள்’ திரைப்படம் அதன் அழுத்தமான கதை மற்றும் நடிப்பால் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்த ஒரு தைரியமான மற்றும் அழுத்தமான படைப்பு. இந்த வெற்றியானது உலகளாவிய சினிமா வட்டாரத்தில், வளர்ந்து வரும் தமிழ் சினிமாவின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் புதிய திரைப்பட படைப்பாளிகளுக்கு திறவுகோலாக அமைந்துள்ளது. ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை திரைத்துறையினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யம் இணைந்து தயாரித்துள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar