Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 9 பிப்ரவரி (ஹி.ச.)
சாக்லேட் உண்பதால் பல் சொத்தையாகி விடும், இருமல் வரும் என்று பெரியவர்கள் சிறியவர்களை அச்சப்பட வைக்கும் சம்பவங்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், உண்மையான கோகோ நிறைந்த சாக்லேட்கள் உண்பதால் உடலுக்கு பெரும் நன்மைகள் கிடைப்பது தான் உண்மை.
ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வேலண்டைன் வாரத்தின் 3 வது நாளான இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் சாக்லெட்டின் வரலாற்றையும், அதன் நன்மைகளையும் பார்ப்போம்,
சாக்லேட் என்ற வார்த்தையின் தோற்றம், சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கொக்கோ பீன்ஸ் அல்லது கொக்கோ விதைகள் மூலம் தயாரிக்கப்படும் கசப்பான பானத்தின் பெயரான ’எக்ஸ்கோட்ல்’ (xocoatl) என்ற ஆஸ்டெக் வார்த்தையில் இருந்து அறியப்படுகிறது. அமேசான் படுகையில் உள்ள காடுகளில் இருந்த கொக்கோ மரத்தின் பழங்கள் தான் சாக்லெட்டின் ஆரம்பம். இதனை கண்டறிந்தவர்கள் மீசே அமெரிக்கர்கள் என்று சொல்லப்படுகிறது. பிறகு ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற சாக்லேட் பிறகு மீண்டும் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கொக்கோ பழங்களைப் பறித்து, அதை உடைத்து அல்லது நசுக்கி, நொதிக்க வைத்து பிறகு ஒரு வாரம் நொதிக்கவிட்டு, அதில் இருந்து கொக்கோ விதைகளை மட்டும் தனியே பிரித்து எடுக்கிறார்கள். அந்த விதைகளை ஒரு வாரம் உலர வைத்து, பிறகு வறுத்து, தரம் பிரிக்கிறார்கள். தரம் பிரிக்கப்பட்ட விதைகளை அரைப்பதன் மூலம் கிடைக்கும் திட கொக்கோவையும், கொக்கோ வெண்ணெயையும் ஒரு குறிப்பிட்ட முறையில் பரித்தெடுக்க, இதில் கிடைக்கும் கொக்கோ தூளைக் கூழக்கி, அதில் குறிப்பிட்ட அளவு பால், சர்க்கரை, வேறு சேர்மான பொருள்கள், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையூட்டிகள் சேர்த்து விதவிதமான சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
சாக்லேட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. மேலும், சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சாக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
சாக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால் தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர்.
இத்தனை நன்மைகள் இருந்தாலும், இவை அனைத்தும் கொக்கோ அதிகம் கொண்ட சாக்லெட்களின் மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை. 1 ரூபாய்க்கும், 5, 10 ரூபாய்க்கும் நமக்குக் கடைகளில் கிடைக்கும் சாக்லேட்களில் கலந்திருக்கும் கொக்கோவின் அளவு மிக மிகக் குறைவே.
டார்க் சாக்லேட் (Dark chocolate) எனப்படும் கொக்கோ அளவு அதிகம் கலந்த, சற்றே கசப்புச் சுவையும் கொண்டவையே அசல் சாக்லேட்கள். அவை உடலுக்கு நன்மையும் செய்கின்றன. ஆனால், இன்னும் சில வருடங்களிலேயே அசல் கொக்கோ கலந்த தூய சாக்லேட்டுகள் சாமானியர்களுக்குக் கைக்கெட்டாத விலைக்குச் சென்றுவிடும் என்ற உண்மையை மறுக்க முடியாது.
Hindusthan Samachar / J. Sukumar