Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 27 மார்ச் (ஹி.ச.)
கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை கொடுத்து அதை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல கூறி இருந்தார்.
சம்பவத்தன்று, அந்த ஊழியர் கோவை ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறுவதற்காக சென்று கொண்ட இருந்தார். அப்போது ரயில் நிலையம் பின்புறம் கூட்செட் சாலையில் அவர் சென்ற போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது.
பிறகு அவர் வைத்து இருந்த தங்கக் கட்டிகளை கொள்ளை கும்பல், கொள்ளை அடித்து தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாலாஜி வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கூட்டு சதி மற்றும் கொள்ளை அடித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கடந்த 22 வருடங்களாக நடந்து வந்தது.
இதில் இன்று நீதிபதி பி.எஸ். கலைவாணி தீர்ப்பு வழங்கினார் அப்போது. கூட்டு சதி, கொள்ளை அடித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வெங்கடேசன் (56) , ரவி சங்கர் (49), மோகன்ராஜ் (50), பதமநாபன் (53), உஸ்மான் மொயிதின் (49), விஸ்வநாதன் (53) ஆகியோருக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 5 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அதேபோன்று இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோன்று, ஆர்.முருகன் (44) என்பவருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதமும், எம்.முருகன் என்பவருக்கு கூட்டு சதி பிரிவின் கீழ் 5 வருடம் மற்றும் ஐ.பி.சி. 414 சட்ட பிரிவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. மற்றும் 1500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 3 பேர் இறந்து விட்டதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மற்ற 7 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J