Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த இரண்டு நாட்களாகவே வீடு ஒன்று பூட்டியே கிடந்துள்ளது.
இந்நிலையில், இந்த வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு நேற்று மாலை தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
மேலும் அவரது முகத்தில் வெட்டப்பட்ட கத்தி அப்படியே இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் 2 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வழக்கறிஞர் வெங்கடேசன் (வயது 43) என்பதும், இவர் தனது நண்பர் சேதுபதியுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, சேதுபதி தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அவரை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இறந்த வெங்கடேசனின் குடும்ப பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J