மீண்டும் டோனி தலைமையில் களம் இறங்கும் சி.எஸ்.கே! - தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
சென்னை , 11 ஏப்ரல் (ஹி.ச.) 18 வது இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 25 வது லீக் போட்டி இன்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு த
மீண்டும் டோனி தலைமையில் களம் இறங்கும் சி.எஸ்.கே


சென்னை , 11 ஏப்ரல் (ஹி.ச.)

18 வது இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 25 வது லீக் போட்டி இன்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தோடு விளையாடி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதன் பிறகு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அணியின் கேப்டனாக மீண்டும் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மீண்டும் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்தும் மிக மோசமாக இருக்கிறது. பல முறை அணியின் வீரர்களை மாற்றம் செய்த நிலையிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால், சென்னை அணி ஒரு நிலையான அணியாக இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தற்போது டோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் அணி சரிவில் இருந்து மீளும் என்ற நம்பிக்கை எழுந்தாலும், டோனி, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் தொடர்ந்து விளையாடுவதை சில ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்து வருகிறார்கள்.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, மூன்று தோல்வியுடன் இருக்கும் கொல்கத்தா அணியும் போதுமான பலம் இல்லாமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருகிறது. அந்த அணியில் உள்ள பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

எனவே, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சென்னை அணியும், மூன்றாவது வெற்றியை பெற கொல்கத்தா அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்புடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அனிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19 முறை சென்னையும், 10 முறையும் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் 11 ஆட்டங்களில் மோதியிருக்கின்றன.

இதில், 8 போட்டியில் சென்னையும், 3 போட்டியில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

Hindusthan Samachar / J. Sukumar