Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 13 ஏப்ரல் (ஹி.ச.)
ஆடு வளர்ப்பு தொழில் தற்போது அதிகம் லாபம் தரும் தொழிலாக மட்டும் இன்றி, பலவிதமான வருமானம் ஈட்டும் தொழிலாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஆட்டு சாணத்தில் மண் வளத்திற்கான இயற்கை சத்துக்கள் நிறைந்திருப்பதால் விவசாயிகள் ஆட்டு சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆட்டு சாணத்தை உரமாக பயன்படுத்த வாங்கிச் செல்வதால், பட்டி அமைத்து ஆடு வளர்க்கும் முறை அதிகரித்து வருகிறது. சில விவசாயிகள் ஆட்டு மந்தைகளை தங்களது நிலங்களில் பட்டி அமைத்து சில நாட்கள் மேய்ச்சலுக்கு விடுகிறார்கள். இதன் மூலம் ஆட்டு சாணம் நேரடியாக நிலத்தில் விழுவதால், அந்த நிலத்தில் உள்ள மண்ணின் சத்து அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆடு வளர்த்தல் மற்றும் தேவைப்படும் இடம் :
நாம் வளர்க்க விரும்பும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம்.
வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் வேலி அமைக்க முடியும். வளர்ந்த ஒரு ஆட்டுக்குட்டிக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும்.
பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சின்ன ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.
எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள், குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் மீண்டும் அடுத்த பருவத்திற்குத் தயாராகி விடும்.
எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் ஈனும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு, பிறகு பிரித்து விட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.
Hindusthan Samachar / J. Sukumar