Enter your Email Address to subscribe to our newsletters
திருவள்ளூர் , 14 ஏப்ரல் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளேரித்தாங்கள் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 20 வயது வாலிபர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை இவர் வழக்கம் போல் பணி முடிந்து போளிவாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுகுச் சென்று கொண்டிருந்த போது, பாக்குபேட்டை பகுதியில் இவரை வழிமறித்த ஒருவர் ஆபாசமாக பேசி, அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை கொள்ளையடித்ததோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றார்.
இதையடுத்து, விக்னேஷ் மணவாளநகர் காவ்ல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், விக்னேஷை தாக்கியது பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை மகன் சதீஷ்குமார் (29) என்பது தெரிய வந்தது. மேலும், சதீஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் தேடுவதை அறிந்த சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், சதீஷ்குமார் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணவாளநகர் போலீசார் அவரை பிடிக்க சென்ற போது, சதீஷ்குமார் தப்பியோட முயற்சித்துள்ளார். இதில் தவறி கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் அவர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டு பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / J. Sukumar