Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ரவிச்சந்திரன் தரப்பில், அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்துவதற்காக அமலாக்கத் துறை இது போல செயல்படுவதாக கடுமையாக சாடினர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Hindusthan Samachar / Raj