Enter your Email Address to subscribe to our newsletters
லக்னோ , 15 ஏப்ரல் (ஹி.ச.)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததோடு, ரசிகர்களால் தல என்று அன்பாக அழைக்கப்பட்ட டோனி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, “டோனி எதற்கு ஆட வேண்டும், இளைஞர்களுக்கு வழி விடலாமே!” என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு டோனி மோசமான சுழல்களை சந்தித்து வந்த நிலையில், நேற்றைய தினம் அத்தனை விமர்சனங்களையும் வீழ்த்தி, மீண்டும் தன்னை சாதனை நாயகனாக முன்னிறுத்தி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30 வது லீக் போட்டி நேற்று இரவு லக்னோவில் நடைபெற்றது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாற செய்த நிலையில், கேப்டன் டோனி களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டோனி, லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் 200 பேரை அவுட் ஆக்கிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். அவர் 155 கேட்ச்கள் மற்றும் 46 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட்களை செய்த வீரர் என்ற சாதனையையும் கேப்டன் தோனி படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் லக்னோ வீரர் அப்துல் சமதை ரன் அவுட் ஆக்கியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 25 வீரர்களை ரன் அவுட் ஆக்கி டோனி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், மற்றொரு சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா 23 ரன் அவுட்களுடன் இரண்டாம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி 22 ரன் அவுட்கள் மூலம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
Hindusthan Samachar / J. Sukumar