Enter your Email Address to subscribe to our newsletters
கொல்கத்தா , 15 ஏப்ரல் (ஹி.ச.)
புதிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியது. முர்ஷிதாபாத்தில் உருவாகிய இந்த வன்முறை மேற்குவங்கத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இதற்கிடையில், மேற்கு வங்க காவல்துறை, முர்ஷிதாபாத்தில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் திரும்பத் தங்களது இருப்பிடத்திற்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், இத்தகைய சதிவலையில் வீழ்ந்து தேவையில்லான வன்முறையில் மக்கள் ஈடுபட வேண்டாம், என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மக்களிடம் வைத்த வேண்டுகோளில்,
மதத்துடன் மதச்சார்பற்ற விளையாட்டுகளை விளையாடக் கூடாது. தர்மம் என்றால் பக்தி, பாசம், மனிதாபிமானம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம், ஒற்றுமை. மனிதர்களை நேசிப்பது அனைத்து மதங்களின் உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். நாம் தனியாக பிறந்தோம், தனியாக இறக்கிறோம்,ஏன் சண்டை? ஏன் கலவரம், போர் அல்லது அமைதியின்மை?
மக்கள் மீதான அன்பு எல்லாவற்றிலும் வெற்றி பெற உதவுகிறது என்று கூறிய முதல்வர், தாக்குதலுக்கு ஆளானவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் பின்னணி, மதம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். என்று தெரிவித்தார்.
மேலும், அனுமதியுடன் அமைதியான போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் யாராக இருந்தாலும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எங்களிடம் சட்டத்தின் பாதுகாவலர்கள் உள்ளனர், அதற்கு வெளியே செயல்படுபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.
அதனால் தான் உங்களைத் தூண்டிவிட முயற்சிக்கும் போது சதிவலையில் விழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar