Enter your Email Address to subscribe to our newsletters
பாட்னா , 15 ஏப்ரல் (ஹி.ச.)
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி பராஸ் அறிவித்துள்ளார்.
மேலும், தனது கட்சி தலீத் கட்சி என்பதால் கூட்டணியில் அநீதியை எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய பசுபதி பராஸ், “நான் 2014 ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வருகிறேன். இனி என் கட்சிக்கும் என்.டி.ஏ-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் 20 ஆண்டுகால ஆட்சியில், மாநிலத்தில் கல்வி முறை பாழாகிவிட்டது. புதிய தொழில்கள் எதுவும் நிறுவப்படவில்லை, மற்றும் பரவலான ஊழல் அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதை பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பசுபதி பராஸின் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சு, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் விலகலால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, என்று தெரிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சியை நிறுவிய ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அவரது சகோதரரான பசுபதி பராஸ் 2021 ஆம் ஆண்டுராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / J. Sukumar