Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
நகை பட்டறையில் ரூபாய் 17 லட்சம் தங்கக் கட்டிகளை திருடி விட்டு புதுச்சேரியில் பதுங்கிய தொழிலாளி போலீசார் கைது செய்தனர்.
கோவை, கம்பட்டி காலனி, பாளையம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவர் வீட்டின் ஒரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பத்தாண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சரவணமூர்த்தி 200 கிராம் தங்க கட்டிகளை கார்த்தியிடம் கொடுத்து ஆபரணமாக செய்யுமாறு கூறி உள்ளார்.
அதை வாங்கிச் சென்ற அவர் வெகு நேரமாகியும் பட்டறைக்கு திரும்பவில்லை, மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சரவணன் மூர்த்தி அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர் இல்லை.
இதனால் அவர் தங்க கட்டிகளை திருடி விட்டு மாயமானது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் கார்த்தியின் செல்போனில் ஆய்வு செய்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த கார்த்திகை மடக்கிப் பிடித்து கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவரிடம் இருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J