Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி , 22 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்த முகானந்தம் என்பவரின் மகன் கண்ணன் என்பவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக நீல்புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அவரது லோட்டி ஆட்டோ உரசியதாக சொல்லப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தின் உரிமையாளரான 58 வயதுள்ள ஜெபராஜ், கண்ணனிடம் தகராறு செய்ததோடு, அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, ஜெபராஜால் தாக்கப்பட்ட கண்ணன் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் நீல்புரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது ஜெபராஜிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. தாக்கப்பட்ட ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் நவீன், தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மற்றொரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட திடீர் மோதலில், திடீரென்று அரிவாள் மூலம் ஒரு தரப்பினர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கந்தவேல் (21), திருச்செந்தூரைச் சேர்ந்த கங்கைமுத்து மகன் நாட்டார் ஆனந்த் (20), ஆண்ட்ரூஸ் நவீன் (32) ஆகிய மூன்று பேருக்கு தலை மற்றும் உடலில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உணவு வாங்குவதற்காக வந்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் விஜய பிரகாஷ் (27) என்பவருக்கு காலில் வெட்டப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு இன்று கொண்ட்டு செல்லப்பட உள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏடிஎஸ்பி திபு, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / J. Sukumar