Enter your Email Address to subscribe to our newsletters
ஐதராபாத் , 23 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியன் பிரிமீரியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 23) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், ஐதரபாத் சன் ரைசரஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி, முதல் போட்டியில் 286 ரன்கள் குவித்து வியக்க வைத்த அந்த அனி, அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. பிறகு 6 வது போட்டியில் வெற்றி பெற்றாலும், அடுத்த போட்டியிலேயே மும்பையிடம் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தாலும், அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திடீர் திடீர் என்று அதிரடி காட்டுவதால், பல போட்டிகளில் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்வி என தடுமாறினாலும், தற்போது தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று வீறுநடை போடுவதால், இனி வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை அளித்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஏற்கனவே தோல்வியடைந்துள்ள ஐதராபாத், இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே சமயம், தொடர் வெற்றிகளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறுவதில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருவதால் இன்றைய போட்டி பரபரப்பு மிக்கதாக இருக்கும்.
மேலும், இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 24 முறை மோதியுள்ளன. இதில், மும்பை 14 முறையும், ஐதராபாத் 10 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.
Hindusthan Samachar / J. Sukumar