Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 26 ஏப்ரல் (ஹி.ச.)
‘மஞ்சள் வெயில்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘நிழற்குடை’. இந்த படத்தின் தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை தேவயானி,
தமிழ் திரையுலகில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.எஸ்.அதியமானுக்கு முதல் முறையாக நன்றி தெரிவித்தார். சினிமாவில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆன நிலையில், இயக்குநர் அதியமானுக்கு வெளிப்படையாக இதுவரை நன்றி தெரிவிக்காத அவர், முதல் முறையாக நிழற்குடை பட விழாவின் மேடையில் நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
படம் குறித்து பேசிய நடிகை தேவயானி,
என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி.
இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்றார்.
Hindusthan Samachar / J. Sukumar