Enter your Email Address to subscribe to our newsletters
திசையன்விளை, 26 ஏப்ரல்
(ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரத். இவரது மனைவி 25 வயதான சிந்து. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டரை வருடங்களாகிறது.
பரத், கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வியாழன் கிழமை காலை சிந்து, நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை, கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெரியவர்கள் உடனே குழந்தையை திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதே நேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழப்பில் ஏற்பட்ட மர்மம் தொடர்பாக தாய் சிந்துவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் காவல்துறையினர் விசாரித்தனர். அந்த விசாரணையில் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், சிந்துவிற்கு உள்ளூர் இளைஞர்கள் சிலருடன் ரகசிய உறவு இருந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், அடிக்கடி அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்ல முடியாது என்பதால் சிறுமியையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்கிடையே தனது சந்தோஷத்திற்கு பெற்ற மகளே, இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த தாய் சிந்து, கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியைச் சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் லிங்கசெல்வம் என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர், பெஞ்சமின் ஆகியோருடன் மதுபோதையில் சிந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து குழந்தையுடன் சிந்துவை 3 பேரும் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை அழுதுள்ளது.
உடனே அவர்களில் இருவர் குழந்தையை சற்று தூரத்திற்கு அழைத்துச் சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த இளைஞர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சிறுமியை மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சுப் பேச்சு இல்லாமல் போன சிறுமியை இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்து சிந்துவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை, கட்டிலிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாகப் பெற்றோரிடம் கூறி நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து, சிந்துவை கைது செய்த போலீசார் கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது சிறுமியின் வாயில் மதுவை ஊற்றி துடிதுடிக்க கொலை செய்த சம்பவத்தில் தாயும் அவரது கள்ளக்காதலர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / B. JANAKIRAM