Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
18 வது ஐபிஎல் தொடரின் பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் சொந்த மைதானமான சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 43 வது லீக் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிராக சொற்பமான ரன்களை எடுத்து மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் சி.எஸ்.கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதன் மூலம், இந்த சீசனில் சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சியிருக்கும் 5 போட்டிகளை கடமைக்கு விளையாடி விட்டு ஐபில் தொடரில் இருந்து சி.எஸ்.கே வெளியேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், சி.எஸ்.கே-வுக்கு அதிஷ்ட்டம் இருந்தால், பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பும் பிரகசமாகும் என்றும் விளையாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அதிக வெற்றியைப் பெறுவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறதாம். அதே சமயம், எஞ்சிய 5 போட்டிகளில் சி.எஸ்.கே அணி அதிகமான ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறுவதும் அவசியம், என்பதால் அதிஷ்ட்டம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar