பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பது முக்கியம் - ஸ்ரீநகரில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
ஸ்ரீநகர், 26 ஏப்ரல் (ஹி.ச.) காஷ்மீரின் பஹல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அ
“பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பது முக்கியம்” - ஸ்ரீநகரில் ராகுல் காந்தி வலியுறுத்தல்


ஸ்ரீநகர், 26 ஏப்ரல்

(ஹி.ச.)

காஷ்மீரின் பஹல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

இது ஒரு பயங்கரமான சோகம். என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும், உதவி செய்வதற்காகவும் நான் இங்கே வந்துள்ளேன். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் இந்த தாக்குதலைக் கண்டித்ததுடன், இந்த நேரத்தில் தேசத்துடன் ஒற்றுமையாக நின்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒருவரை நான் இன்று சந்தித்தேன். இந்தத் தாக்குதலில் தங்களின் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது அன்பினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முழு தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது. நேற்று அரசுடன் நாங்கள் ஒரு கூட்டம் நடத்தினோம். அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சமூகத்தை பிளவுபடுத்துவதே இந்தத் தாக்குதலுக்கு பின்னுள்ள ஒரே நோக்கம். பயங்கரவாதிகள் நடத்த விரும்பியதை தோற்கடிப்பதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளை, யாரோ சிலர் தாக்குவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். இந்த தீயச் செயல்களுக்கு எதிராக போராடுவதும், பயங்கரவாதத்தை முற்றிலும் தோற்கடிப்பதும் மிகவும் முக்கியம். நான் முதல்வர் உமர் அப்துல்லாவையும், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவையும் சந்தித்தேன் அவர்கள் என்ன நடந்தது என்று எனக்கு விளக்கினார்கள். நானும் எனது கட்சியும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று இருவரிடமும் உறுதி அளித்திருக்கிறேன் என்று ராகுல் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்திலும், துணை நிலை ஆளுநரை ஆளுநர் மாளிகையிலும் சந்தித்தார்.

அப்போது அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏகள் குலாம் அகமது மிர் மற்றும் தாரிக் ஹமீது கரா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சையது நசீர் ஹுசைன் ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்தார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM