Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 27 ஏப்ரல் (ஹி.ச.)
நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வம் உடையவர்களாக, சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர்.
தொழில் :
தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார்.
அரசியல் :
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னர் வந்த நாட்களில் ‘நீதிக்கட்சி’ என மாற்றம் பெற்று தமிழகத்தின் முதல் தேர்தலில் போட்டியிட்டது. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழகத்தின் முதல் முதலமைச்சராகும் வாய்ப்பு பிட்டி தியாகராயருக்குத் தேடி வந்தது. ஆங்கில அரசின் கவர்னர், நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பிட்டி தியாகராயரை முதலமைச்சர் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பிட்டி தியாகராயர் அந்தப் பதவியை மறுத்து சுப்பராயலு என்பவரை முதலமைச்சராகப் பதவி ஏற்க வைத்தார். பதவி தேடி வந்த போதும் ஏற்க மறுத்து மக்கள் பணிகளில் எப்போதும் போல முன் நின்றார்.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் :
பலரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக பிட்டி தியாகராயர் பதவி ஏற்றார். பதவி ஏற்று சில மாதங்களில் பிரிட்டிஷ் அரசர் சென்னை வருவதாக இருந்தது. ஆங்கிலேய ஆளுநர் பிட்டி தியாகராயரிடம், ‘சென்னை மாநகர மேயர் என்னும் முறையில் ஆங்கிலேய பாணி உடை அணிந்துதான் நீங்கள் வரவேற்க வேண்டும்’ என்று கூற, தியாகராயரோ, ‘என் நாட்டின் கதராடை அணிந்துதான் வரவேற்பேன். ஆங்கிலேய உடை அணிந்துதான் வரவேற்க வேண்டுமெனில், நான் நிகழ்வுக்கே வரவில்லை’ என உறுதியாகக் கூறினார். வேறு வழியின்றி ஆங்கிலேய அரசு அவரை வெள்ளை ஆடை அணிந்து வரவேற்கச் சொன்னது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ‘வெள்ளுடை வேந்தர்’ என்று அழைக்கப்பட்டார்.
அதுபோல மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்து ஆங்கில அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளை தியாகராயர் போராடித் திரும்பப் பெற வைத்தார். இந்தியர்கள் அவர்கள் விரும்பிய ஆடையில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் :
சென்னை மாநகராட்சியின் மேயராக தியாகராயர் திகழ்ந்த போது ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரே கல்வி கற்க இயலும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி சென்னையின் பல இடங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அனைவருக்கும் கல்வி உரிமையைக் கட்டணமின்றி வழங்கி அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற நிலையை உருவாக்கினார். சில இடங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க 1892 ல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே முதன் முறையாக அனைவருக்கும் கல்வி உரிமை, பள்ளிகளில் மதிய உணவு என்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவர் தொடங்கிய பள்ளி பின்னாளில் தியாகராயர் கல்லூரி என வளர்ச்சி பெற்றது.
சென்னையை கட்டமைத்தவர் :
சென்னை மாநகராட்சியின் மேயராகத் தியாகராயர் இருந்தபோது சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவியது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் அப்போது நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்திச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கி சென்னையின் பல பகுதிகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியைப் பல மாதங்கள் முன்னின்று தொடங்கி வைத்தார்.
அதுபோல சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டுமே மண்ணெண்ணெய் விளக்கு எரியும் திட்டம் நடைமுறையில் இருந்தது. அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. தனது சொந்த நிதியைப் பாதி வழங்கி சுமார் சில லட்சம் மதிப்பில் ஏற்றத்தாழ்வின்றி சென்னையின் அனைத்து வீதிகளிலும் மண்ணெண்ணெய் விளக்குகள் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்தினார்.
தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவராகத் திகழ்ந்த போதிலும், அரசுக்கு இணையாகத் தன்னுடைய சொந்தச் செல்வங்களைக் கொண்டு சென்னை முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். சென்னையில் தென் சென்னை மக்கள் மட்டுமே டிராம் என்று அழைக்கப்படும் பொதுப் போக்குவரத்து வசதியைப் பெற்று வந்தனர். சென்னையின் பிற பகுதி மக்களுக்கு அந்த வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின்னர் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கக் காரணமாகத் திகழ்ந்தவர் தியாகராயர்.
சிறப்புகள் :
தியாகராயரின் நினைவாக இன்றும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரிக்கு இவரது பெயர் உள்ளது. மேலும் சென்னை தியாகராயர் நகர் என்பது இவரைக் குறிப்பதுவே. பெங்களூரிலும் தியாகராயர் நகர் என்ற பகுதி உள்ளது. இந்திய அரசு அண்மையில் இவரினுருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அஞ்சல் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் காணப்படுகிறது.
ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற தி.மு.க வினர் நகர மன்றத்தில் நுழையும் முன் வளாகத்தின் எதிரில் அமைந்திருந்த தியாகராயர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மறைவு :
சென்னையின் அடையாளமாகவும், திராவிட கழகத்தின் முன்னோடியாகவும் திகழும் பிட்டி தியாகராயர், 1925 ஆம் ஆண்டு, ஏப்ரல் 28 ஆம் தேதி தம் 72 வது வயதில் மறைந்தார்.
Hindusthan Samachar / J. Sukumar