Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயில் முன்பாக குவிக்கப்பட்டு கடும் சோதனைகளுக்கு பின்னரே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் இருந்த போதிலும் பாதுகாப்பு சோதனைகளையும் மீறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய், பெட்ரோல், உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்த ஒருவர் மனு அளிக்கும் இடத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த பெயிண்டுகளுக்கு கலக்க பயன்படும் திண்ணறை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலியில் தண்ணீர் பிடித்து நுழைவாயில் இருந்து ஓடிய காட்சிகள் மனு அளிக்க வந்தவர்களை அச்சத்தையும், பரபரப்புக்குள்ளும் ஆழ்த்தியது இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை வெளியே அழைத்து வந்த போலீசார் அவர் உடலில் தண்ணீரை ஊற்றி அவர் வைத்திருந்த பாட்டிலையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவல்துறையினரின் பாதுகாப்பு சோதனைகளை தாண்டி எரிபொருளை உடலில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் போலீசாரின் பாதுகாப்பு சோதனைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அலட்சியமான போலீசாரின் சோதனைகளால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / Durai.J