Enter your Email Address to subscribe to our newsletters
கன்னியாகுமரி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த மனோ தங்கராஜ் பள்ளியாடியில் உள்ள எல்.எம்.எஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.
மேலும் என்.எம்.சி.சி கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தபோது தான் அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தன்னை திமுகவில் இணைந்து கொண்ட அவர், தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார்.
1996 முதல் 2006 வரை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பணியாற்றிய மனோ தங்கராஜுக்கு கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட மனோ தங்கராஜுக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜேந்திர பிரசாத் மற்றும் பாஜக சார்பில் ஷீபா பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர்.
அந்தத் தேர்தலில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார்.
2016- 2021 அதிமுக ஆட்சியின்போது திமுக தலைமை பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், அதை கன்னியாகுமரியில் முன்னின்று நடத்திய மனோ தங்கராஜ் உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்தார்.
இதன் காரணமாகவே 2021 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பத்மநாதபுரம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
அந்தத் தேர்தலில் 87 ஆயிரம் வாக்குகளைப் பெற்று சுமார் 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மனோ தங்கராஜ் மீண்டும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக 2021 அமைச்சரவையில் அவரும் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு ஐடி துறை முதலில் ஒதுக்கப்பட்டது. 2 ஆண்டுகள் அவர் ஐடி துறை அமைச்சராக இருந்தார். 2023 மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஐடி துறைக்கு பதிலாக அவருக்குப் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
சுமார் 1.5 ஆண்டுகள் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது சில பல சர்ச்சைகளும் எழுந்தன.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு உட்கட்சி மோதலும் காரணமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில் தான் 7 மாதங்களில் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், கன்னியாகுமரியில் போட்டி கடுமையாக இருக்கும். அங்கு பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.
தற்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லை.
இதனால் அடுத்தாண்டு நடக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டே மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்த்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
Hindusthan Samachar / Durai.J