Enter your Email Address to subscribe to our newsletters
திருத்தணி, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சித்திரை மாத கிருத்திகை மற்றும் முருகப்பெருமானை தரிசனம் செய்ய உகந்த நாளான செவ்வாய்க்கிழமை இணைந்து வந்ததால், திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாதம் கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை யொட்டி மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மற்றும் திருப்படிகள் வழியாக மலைக்கோயில் வந்தடைந்தனர்.
காலை முதலே பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து டிஎஸ்பி கந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதி உலா நடைபெற உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பக்தர்கள் வசதிக்காக மாடவீதி முழுவதும் மேட் அமைக்கப்பட்டு குடிநீர் மற்றும் பானகம் வழங்கப்பட்டு வருகிறது திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தடையின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Raj