Enter your Email Address to subscribe to our newsletters
இந்தியா, 3 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்ஷா 1914ம் ஆண்டு ஏப்ரல் 03ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி ஜம்ஷெட்ஜி மானெக்ஷா ஆகும்.
இவர் 1934ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரின் போது (1942) ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன.
படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி வெற்றிகண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டீ.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி அங்கேயே அணிவித்தார்.
பிறகு பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை 'சாம் பகதூர்' (துணிச்சல்காரர்) என்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948ம் ஆண்டு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தார்.
1962ம் ஆண்டு சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார்.
1969ம் ஆண்டு இந்தியாவின் ராணுவத் தலைமை தளபதியானார். இவருக்கு 1968ம் ஆண்டு பத்ம பூஷண், 1972ம் ஆண்டு பத்ம விபூஷண், 1973ம் ஆண்டு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது.
40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்ற சாம் மானெக்ஷா தனது 94வது வயதில் (2008) மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J