நடிகர் சிவாஜி கணேசன் வீடு ஜப்தியை நீக்க கோரி நடிகர் பிரபு மனு
சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச) நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. ஜகஜால கில்லாடி என்ற பட தயாரி
Chennai High court order


சென்னை, 3 ஏப்ரல் (ஹி.ச)

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

ஜகஜால கில்லாடி என்ற பட தயாரிப்புக்காக பெற்ற 3 கோடியே 74 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் 9 கோடியே 39 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தக் கோரி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்துக்கு எதிராக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர், ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், துஷ்யந்தின் தந்தையான ராம்குமாருக்கு, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் பங்கு உள்ளதால், அவரது வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமென வாதிட்டார்.

தனது சகோதரர்

ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை எனவும் நடிகர் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே?என யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், இது போன்று அவருக்கு உதவ முடியாது என்றும் நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Hindusthan Samachar / Raj