Enter your Email Address to subscribe to our newsletters
விருதுநகர், 3 ஏப்ரல் (ஹி.ச)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலை மீது உள்ளது. அக்கோவிலுக்கு செல்லும் வழி காட்டுப்பாதையாக இருப்பினும் ஏராளமான பக்தர்கள் அவ்வழியாக வந்து சாமி கும்பிட்டு செல்வர்.
கடந்த 2015ம் ஆண்டில் பலத்த மழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கி 10 பக்தர்கள் இறந்தனர். இதையடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட நாட்கள் இல்லாமல் நாள்தோறும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் செல்ல நீதிமன்ற வழங்கிய உத்தரவு அமலுக்கு வருவதாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள், பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதன்படி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப் பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்ற பாதை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b