Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 7 ஏப்ரல் (ஹி.ச.)
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார்.
துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனது இசை மழையால் பல வெற்றிப் படங்களுக்கு உயிரூட்டிய என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பை கையாளுகிறார்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன்,
கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என 'கிறிஸ்டினா கதிர்வேலன்' விறுவிறுப்பாக செல்லும்.
'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் மாநகர இளைஞனாக நடித்த கெளஷிக் ராம், கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு கிராமத்து கதிர்வேலன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி பிரதிபாவின் அசாத்திய நடிப்பும், உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியது.
எதார்த்தம் மீறாத இப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தனின் இசை மிகப்பெரிய பக்க பலமாகும். 2023ம் ஆண்டு வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் பின்னணி இசையை போன்று 'கிறிஸ்டினா கதிர்வேலன்' பின்னணி இசையையும் மக்கள் கொண்டாடுவார்கள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் தேர்ந்த ஒளிப்பதிவை பிரகத் முனியசாமி வழங்கியுள்ளார், என்று தெரிவித்தார்.
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J