Enter your Email Address to subscribe to our newsletters
ரோம், 19 மே
(ஹி.ச.)
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.
இதில், வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.
பின்னர் புதிய போப் ஆண்டவர் 14-ம் லியோ பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி பேசினார். அப்போது இத்தாலிய மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி ஆகியவற்றில் போப் லியோ பேசினார். இதைத் தொடர்ந்து, போப் லியோ தனது முதல் திருப்பலியின் தொடக்கத்தில் கார்டினல்கள் முன்னிலையில் முதல் முறையாக ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில் வாடிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ நேற்று பதவியேற்றுள்ளார். போப் 14ம் லியோவுக்கு, போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பின் போது போரால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்காக போப் 14ஆம் லியோ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
புதிய போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றுள்ளார்.
Hindusthan Samachar / B. JANAKIRAM