Enter your Email Address to subscribe to our newsletters
இஸ்லாமாபாத், 22 மே
(ஹி.ச.)
அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது.
அத்தியாவசிய தேவையான கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க கூட முடியாத நிலைமையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. ஆனாலும் பாகிஸ்தானால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை பாகிஸ்தான் அரசு அடையவில்லை. திட்டமிடப்பட்ட 3.6 சதவீதத்திற்கு பதிலாக வெறும் 2.68 சதவீத வளர்ச்சி விகிதத்தை மட்டுமே அடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் நிதி நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.
இதனை சமாளிக்க, சர்வதேச வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன் ஏற்பாடுகள் மூலம் கூடுதலாக, 4.9 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் திட்டமிடல் செயலாளர் தலைமையில் நடந்த குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் கடும் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / B. JANAKIRAM