விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ''லவ் மேரேஜ்'' எனும் திரைப்படத்தின்
லவ் மேரேஜ்


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில்,

எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.

இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

'லவ் மேரேஜ்' ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில்,

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன்.

இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர். விக்ரம் பிரபு சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர்.

இந்தப் படத்தில் அனைவரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இதற்காக அனைவருக்கும் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்,

இந்தப் படத்தில் நான் பணியாற்றியதற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான்.‌ இதற்காக முதலில் அவருக்கு நன்றி.

இயக்குநர் என்னை சந்தித்து கதை சொன்ன பிறகு கதையைப் பற்றிய ஒரு விசுவல் பேலட்டை

( காட்சி மொழிக்குரிய சித்திரங்கள்) காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

நான் ஒரு 90ஸ் கிட்ஸ். அதனால் திரையரங்கத்திற்கு செல்லும் போது தமிழ் படம் பார்க்க வேண்டும் என்று தான் செல்வோம். தற்போது பான் இந்திய திரைப்படங்களை பார்க்கிறோம் தென்னிந்திய திரைப்படங்களை பார்க்கிறோம். 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தமிழ் படத்தை பார்த்த மன நிறைவை ஏனைய திரைப்படங்கள் ஏற்படுத்துமா? என்று கேட்டால் தெரியாது. வேற்று மொழி திரைப்படங்களும் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு என ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது இருந்தது. இயக்குநர் சண்முக பிரியன் இசைமீது பற்று கொண்டவர். இப்போது அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார். அவருக்கு திரைத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு.

புதிய தயாரிப்பாளர்களான டாக்டர் ஸ்வேதாவும் , டாக்டர் தீரஜும் சினிமா மீது உள்ள காதலால் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அதை அவர்களை சந்தித்து பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆர்வம் மட்டும் இல்லாமல் சினிமா பற்றிய வர்த்தக அறிவும் அவர்களிடத்தில் இருக்கிறது.

விக்ரம் பிரபு சினிமாவில் நான் சந்தித்த நபர்களிலேயே நேர்மையானவர் . கண்ணியமானவர் . அவர் நடித்த படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த தொடக்கமாக இருக்கும் என கருதுகிறேன். அவருடைய படத்தில் சிறந்த பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அது இந்த படத்தில் சாத்தியமாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட் ஆகும்.

மிஷ்கின் ஒரு முழுமையான கலைஞன். அவர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நூல் தான். அந்த நூலில் கட்டப்பட்ட பூக்கள் தான் மோகன் ராஜாவின் பாடல் வரிகள். இதனால் பூமாலையில் அவர் பூவாக இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கும் என்றால் நல்ல குளிரான சூழலில் கதகதப்பான நெருப்பிற்கு முன் உட்காருவது போல் சௌகரியமாக இருக்கும். அவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல தமிழ் வார்த்தைகளையும் ,தமிழ் தத்துவங்களையும் சாமர்த்தியமாக உள்ளே புகுத்தி வருகிறார். இந்தப் படத்தில் கூட காதலுக்கான அழகான வரிகளை எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசிக்கலாம். இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் திருப்தியை அளிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், '' சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து திரையரங்க அதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு 'லவ் மேரேஜ்' படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டால் உடனே தகவல் தெரிவிக்கவும் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் படத்தை காண ஆவலாக இருக்கிறேன் என்றார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களை முன்கூட்டியே திரையிட்டால் திரையரங்க தரப்பிலிருந்து அதனை காண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரத்தில் நான்கு ஐந்து படங்கள் திரையிடுவதால் அதற்கான பணிச்சுமை இருக்கும்.‌

அவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது விரைவில் வெளியாகும் நல்ல படங்களை பற்றிய பேச்சு நடந்தபோது .. லவ் மேரேஜ் கண்டிப்பாக மிக நல்ல படமாக இருக்கும் என ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் தெரிவித்து இருந்தாராம்.

ஒரு படம் வெளியாவதற்கு முன் அங்கீகாரம் கிடைப்பது என்பது... அதிலும் அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கிய படத்திற்கு இந்தியா முழுவதும் திறமையான இயக்குநர் என அறியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் சிறந்த படம் என பாராட்டும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அன்னை இல்லத்தில் வாரிசான விக்ரம் பிரபு இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார்.‌ 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள்.

திருமணம் தொடர்பான விசயங்களை தமிழ் சினிமாவிற்கான பாரம்பரிய இலக்கணங்களுடன் உருவாகி இருக்கும் படம். அற்புதமான - அழகான பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்துடன் வணிக ரீதியாக தொடர்பே இல்லாத தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், இப்படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இது எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

அந்த அளவிற்கு இயக்குநர் சண்முக பிரியன் திரையுலகில் வலிமையான நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை நான் அவரின்

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில்,

சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. அவருடைய படங்களில் இருக்கும் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும்.‌ அவர் இயக்குவது போன்ற படங்களை இயக்க வேண்டும் என்றால் எனக்கு இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமாக திகழ்ந்த என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக்கு நன்றி. 2017 ஆம் ஆண்டின் சினிமாவில் உதவிய இயக்குநராக சேர்வதற்கு முயற்சி செய்தேன். அந்த தருணத்தில் நானும், தயாரிப்பாளர் யுவராஜும் இணைந்து குறும்படத்தினை உருவாக்கினோம். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான நட்பு தொடர்கிறது.‌ இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், ரா. கார்த்திக் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான ஸ்வேதா ஸ்ரீ என்னுடைய நண்பர் தான். அவருடைய வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது உணவருந்தி கொண்டே படத்தைப் பற்றிய விசயங்களை பேசினேன். நானே தயாரிக்கிறேன் என அவரே ஆர்வத்துடன் முன் வந்தார். இந்தப் படத்திற்கு என்ன பட்ஜெட் என்று அவர் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. சுதந்திரமாக இந்த படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்திற்கு விக்ரம் பிரபு தான் நாயகன் என தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய நண்பர்கள்தான் அவர் ஆக்சன் ஹீரோ! இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அப்போதுதான் அவருடைய நடிப்பில் 'இறுகப்பற்று 'என்ற படம் வெளியானது. அதில் அவருடைய நடிப்பில் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.

அவர் நடிக்க சம்மதம் தெரிவித்த உடன் இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்தது. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். தற்போது இந்த படத்தை பார்த்த பிறகும் என் மீதான நம்பிக்கை விலகவில்லை என நம்புகிறேன்.‌ இவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையப்பாளர் ஷான் ரோல்டனை சந்தித்த போதும் விக்ரம் பிரபுவிடம் சொன்னது போல் எனக்கு கதை சொல்ல தெரியாது. திரைக்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றேன். அதன் பிறகு அவரிடம் ஒன்றரை மணி நேரம் கதையை சொன்னேன். அவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பணியாற்ற தொடங்கினார். அந்தத் தருணத்தில் விக்ரம் பிரபுவுக்கு சிறந்த ஆல்பம் ஒன்றை இந்த முறை நான் தருவேன் என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து பாடலாசிரியர் மோகன் ராஜன், நடிகர் ரமேஷ் திலக் , விநியோகஸ்தர் சக்தி வேலன், அருள் தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, சுஷ்மிதா பட் ஆகிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்யாணத்திற்காக காத்திருக்கின்ற எல்லா ஆண்களும், பெண்களும் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்த சமூகம் வயதுடன் பல விசயங்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்பான கேள்வியையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக யாருக்கும் மற்றவர்கள் கேள்வி கேட்டால் பிடிக்காது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,

நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்... இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.

ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.

இந்தப் படத்தில்... இந்த கதாபாத்திரத்தில்... நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் 'லவ் மேரேஜ்' திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.

Hindusthan Samachar / Durai.J