Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 23 ஜூன் (ஹி.ச.)
உலகளவில் 90 நாடுகளுக்கு மேல் 120 மில்லியன் மக்கள் விளையாடி வரும் டென்பின் பவுலிங் விளையாட்டு இந்தியாவிலும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
தமிழ்நாடு டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் மாநில அளவிலான போட்டிகளை நடத்தி திறமையான டென்பின் பவுலிங் வீரர்களை அடையாளம் கண்டு கண்டு வருவதோடு, அவர்களை தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்கிறது.
அந்த வகையில், 2 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியை தமிழ்நாடு டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸின் தலைவர் ராகினி முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் மையத்தில் ஜூன் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மஹிபால் சிங் - விஷ்ணு.எம் மோதினார்கள்.
பரபரப்பான இப்போட்டியில் மஹிபால் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை (2-0) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மூன்று போட்டிகளில் சிறந்த பின்பால்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில் மஹிபால் சிங் நேரடி போட்டிகளில் விஷ்ணுவை (225-217 & 202-180) என்ற பின்பால்கள் அடிப்படையில் வீழ்த்தினார்.
முன்னதாக, மூன்று போட்டிகளில் முன்னிலை பெற்றதன் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட முதல் அரையிறுதியில் விஷ்ணு, ஷபீர் தன்கோட்டை 2-1 (182-157, 168-199 & 204-203) என்ற பின்பால்கள் அடிப்படையில் தோற்கடித்தார். இரண்டாவது அரையிறுதியில், மஹிபால் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹரிநாராயணன்.பி-யை 2-0 (189-158 & 203-137) என்ற பின்பால்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
விஷ்ணு.எம் 187.17 சராசரியுடன் 2246 பின்பால்களுடன் 2வது சுற்றுக்குப் பிறகு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக மஹிபால் சிங் (பின்பால் – 2224, சராசரி – 185.33) இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பரிசுகள்:
6 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி : விஷ்ணு.எம் (201.83)
ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் : விஷ்ணு.எம்(268)
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar